வெளிநாடுகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை: தமிழக இளைஞர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்

மதுரை: வெளிநாடுகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஏமாற்றும் கும்பலிடம் தமிழக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மதுரை எஸ்பி சிவபிரசாத் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு.

தமிழகத்தைச் சேர்ந்த பல உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர், கம்போடியா நாடுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் வேலைக்கென அதிக சம்பளம் தருவதாக சில மோசடி கும்பல் அழைத்துச் செல்கிறது.

சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று கால் சென்டர், கிரிப்டோ கரன்சி மோசடிகளில் சிலர் ஈடுபடுத்துகின்றனர். இது போன்ற வேலையை மறுக்கும் இளைஞர்கள் துன்புறுத்தப்படுவதாக தகவல் உள்ளது. இதை தடுக்க, வெளிநாடுகளுக்கு வேலை நிமிர்த்தமாக செல்லும் இளைஞர்கள், மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம் போன்ற விவரங்களை தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.

விவரங்கள் தெரியவில்லையெனில் தமிழ்நாடு அரசு அல்லது சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மத்திய வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படி வெளிநாட்டு வேலைக்கு செல்லவேண்டும்.

இது தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவு துறை தாய்லாந்து, மியான்மர், கம்போடியா நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலுள்ள தமிழர்களுக்கு உதவி புரியும் பணியில் தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலத்துறை ஈடுபடுகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவையெனில் இச்சேவை எண்கள் 9600023645, 8760248625, 044-28515288 தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.