ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் விதமாக தமிழ்நாடு சட்டப்பேரையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு அரசுக்கு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கும் கடிதம் மூலமாக அரசு பதிலளித்துவிட்டது. இந்த நிலையில் மசோதா தொடர்பாக மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்காகவும், ஒழுங்குமுறைபடுத்துவதற்காகவும் தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்டிருக்கின்ற சட்டத்துக்கு ஒப்புதல் தருவதை பற்றி ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில்களை சொல்லயிருந்தோம். இன்றைக்கு ஆளுநரிடத்திலே அதைப் பற்றிய அரை மணி நேரம் சில விளக்கங்களைத் தந்திருக்கின்றோம். ஆளுநர் இன்னும் அந்த மசோதா என்னுடைய பரிசீலனையில் இருக்கிறது, முதலமைச்சரிடம் சொல்லுங்கள் விரைந்து அதில் முடிவெடுத்து முடிவை தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவசர சட்டத்துக்கும், இந்த சட்டத்துக்கு வித்தியாசம் கிடையாது.
அவசர சட்டம் இயற்றப்பட்டபோது ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 17, இப்போது அதன் எண்ணிக்கை 25. நேரடியாக விளையாடுவதில் இதுவரை யாரும் தற்கொலை செய்துவிட்டதாக பட்டியல் எங்களுக்கு கிடையாது. எனவே ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். அதற்காக அந்த வல்லுநர் குழு கொடுத்திருக்கின்ற அறிக்கை போன்றவற்றையும் எங்களின் முகப்புரையில் சொல்லி இருக்கிறோம் என்பதையும் தெரிவித்து இருக்கிறோம்.
எனவே இதனை கூடிய விரைவில் பரிசீலனை செய்து தர வேண்டும் என்று முதலமைச்சர் சார்பில் கேட்டுக்கொண்டோம். இதுவரைக்கும் 21 மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்துக்குள் தான் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று இதுவரை எந்த கால நிர்ணயமும் கிடையாது. அரசியல் சட்டத்தில் அதற்காக திருத்தம் கொண்டு வந்து கால நிர்ணயம் கொண்டுவந்தால் நிச்சயமாக அந்த குறிப்பிட்ட காலத்துக்குள் கேட்கலாம்.
3-ம் தேதி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் அமைக்க வேண்டும். அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு தான் நாங்கள் அதற்கான விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை அமைக்க வேண்டும். அரசாணை தான் போடப்படவில்லை. 5-ம் தேதி சட்டமன்றம் கூடும் என்கின்ற அறிவிப்பு வந்த காரணத்தினால் அது செய்யப்படவில்லை. இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தால் உடனடியாக அமலுக்கு வரும். மேலும் அவசர சட்டம் காலாவதியாகிவிட்டது” என்று தெரிவித்தார்.