ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். பலர் பணத்தை இழந்து செய்வதறியாது நெருக்கடியில் சிக்குகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத்தான் தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது.
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கோரி தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருந்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலில் அது காலாவதியாகியிருந்தது. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த ஆளுநர், சட்ட மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் நேரிலும் விளக்கம் தந்தோம். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறினார். ஆளுநர் ரவி ஒப்புதல் தந்தால் உடனடியாக ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் அமல்படுத்தப்படும்” என்றார்.