ஆம் ஆத்மி தீவிர பிரச்சாரம்: குஜராத் தேர்தலில் மும்முனை போட்டியா?

குஜராத் மாநிலத்தில் இதுவரை பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருந்த நிலையில், இன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்ததால் மும்முனை போட்டியாக மாறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
குஜராத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி 88 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்பு மனுவை திரும்பப் பெறாமல் இருந்;திருந்தால் அரவிந்த் கேஜ்வால் தலைமையில் செயல்படும் கட்சி அனைத்து தொகுதிகளிலும் களத்தில் இருந்திருக்கும். இந்நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
image
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மற்றும் பாரதிய பழங்குடியினர் கட்சி களத்தில் இருந்தாலும், இதுவரை காங்கிரஸ் – பாஜக இடையே நேரடி போட்டி இருந்து வருகிறது. இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சி 57 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 12 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நான்கு தொகுதிகளிலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 14 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. இருந்த போதிலும் புதிய வரவான ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பஞ்சாப் முதல்வர் பகவன்த் மான் மற்றும் பல தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆம் ஆத்மி கட்சிக்காக குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு பிரச்சாரம் செய்தனர்.
image
இதற்கு முன்பே குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி களமிறங்கி இருந்தாலும், வெற்றிக்கனி எட்டாமல் இருந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சி வழக்கம் போல தீவிரமாக பிரச்சாரம் செய்யாத காரணத்தால், ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது சக்தியாக குஜராத் சட்டசபை தேர்தலில் உருவெடுக்குமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் மட்டுமே குஜராத் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலிலும் ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலோட் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.
image
இத்தகைய சூழலில் முதல் கட்ட தேர்தலில், 2.39 கோடி வாக்காளர்கள் இன்று 788 வேட்பாளர்களின் தேர்தல் முடிவை நிர்ணயிக்க உள்ளனர். அடுத்த கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குகளுடன், டிசம்பர் எட்டாம் தேதி குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் போது குஜராத்தில் மும்முனைப் போட்டியா அல்லது வழக்கம் போல இரண்டு முனை போட்டியா என்பது தெளிவாகும்.
– கணபதி சுப்ரமணியம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.