புதுடெல்லி: ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்கும் கால கட்டத்தில் மனித நேயததை மையமாக கொண்ட உலகை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி 20 அமைப்பின் தலைமை என்ற முக்கியமான பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், ஜி-20 மேலும் சிறப்பாக செயல்பட முடியுமா? அடிப்படையான மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கிரியா ஊக்கியாக நாம் செயல்பட்டு ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயன் அளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்னும் உணர்வை மேம்படுத்த பாடுபடும். எனவே, நமது கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல. நாம் கூட்டாக மேற்கொள்ளத் தவறிய மனிதச்சூழல்களில், அண்மையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டுள்ளது. இன்று உலகில் உள்ள அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான உற்பத்தியை மேற்கொள்ள நம்மிடம் வழிமுறைகள் உள்ளன.
இன்று நாம் வாழ்வதற்கு போராட வேண்டிய அவசியம் நமக்கில்லை நமது யுகத்தில் போருக்கு அவசியமில்லை, உண்மையில் அது தேவையே இல்லாத ஒன்று. இன்று, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், பெருந்தொற்றுகள் என்னும் மிகப் பெரிய சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியாது. அதே சமயம், ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே தீர்வு காணமுடியும். இன்று இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. மக்களை மையமாக கொண்ட நமது ஆட்சி முறை, திறன்மிக்க இளைஞர்களின் படைப்பாற்றல் தன்மையை ஊக்குவிக்கும் அதேவேளையில் மிகவும் விளிம்பு நிலையில் உள்ள மக்களையும் கவனத்தில் கொள்கிறது.
தேசிய வளர்ச்சி என்பதை மேல்தட்டு மற்றும் அடித்தட்டு ஆட்சி முறையாக அல்லாமல் மக்கள் தலைமையிலான மக்கள் இயக்கமாக உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். பொதுமக்களுக்கான டிஜிட்டல் சேவைகள் சிறந்த முறையில் அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்கும் இடையே செயல்படக் கூடியதாக அமையும் வகையில் தொழில்நுட்பத்தை ஊக்குவித்துள்ளோம். இது சமூக பாதுகாப்பு, நிதி உள்ளடக்கம், மின்னணு பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் புரட்சிகரமான முன்னேற்றத்தை வழங்கியுள்ளது.
இந்த காரணங்களால் இந்தியாவின் அனுபவம் உலகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய பார்வைகளை வழங்கும். நமது ஜி-20 தலைமைத்துவத்தின்போது நாம் இந்தியாவின் அனுபவங்கள், கற்றல்கள் மற்றும் மாதிரி செயல்பாடுகளை அனைவருக்கும் வழங்க முடியும், குறிப்பாக வளரும் நாடுகளுக்கு அவற்றை வழங்க இயலும். நமது ஜி-20 முன்னுரிமைகள், ஜி-20 உறுப்பு நாடுகளுடனான ஆலோசனைகளோடு மட்டுமே வடிவமைக்கப்படாமல், இதுவரை இவர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத, தென்பகுதி நாடுகளின் ஆலோசனைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
ஒரே பூமியை சீர் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, ஒரே குடும்பம் என்ற நல்லிணக்கத்தை வளர்த்து, ஒரே எதிர்காலம் என்ற நம்பிக்கையை வழங்குவதில் நமது கவனம் திகழும். பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கையைப் பாதுகாக்கும் இந்திய பாரம்பரியத்தின் அடிப்படையில் நீடிக்கவல்ல மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை நாம் ஊக்கப்படுத்துவோம். மனிதகுலத்திற்கு இடையே இணக்கத்தை மேம்படுத்த உணவு, உரங்கள், மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் உலகளாவிய விநியோகத்தை அரசியல்மயமாக்கலில் இருந்து விடுவிக்க நாம் முயற்சிகளை மேற்கொள்ளப்படும். இது புவி அரசியல் பதற்றங்கள், மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுக்காமல் இருக்கும். நமது சொந்தக் குடும்பங்களில் கூட அதிகபட்ச கவனம் தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இது உலகளவிலும் பொருந்தும். நமது எதிர்கால தலைமுறைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களால் ஏற்படும் அபாயங்களை குறைக்கவும் உலகளாவிய பாதுகாப்பை விரிவுபடுத்தவும் மிகவும் சக்தி மிக்க நாடுகளுடன் நேர்மையான உரையாடலை நாம் ஊக்குவிப்போம். இந்தியாவின் ஜி-20-ன் மையப்பொருள் என்பது அனைவரையும் உட்படுத்தியதாக, லட்சியமிக்கதாக, செயல்பாடுகள் சார்ந்ததாக, உறுதியானதாக இருக்கும். புனரமைத்தல், நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையாக இந்தியாவின் ஜி-20 தலைமையை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைவோம். மனிதநேயத்தை மையமாக கொண்ட உலகம் என்ற புதிய முன்னுதாரணத்தை வடிவமைக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.