புதுடெல்லி: ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும்ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், ரஷ்ய தொழில் நிறுவனங்கள், தங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் இல்லாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
இதனால், கார், விமான தயாரிப்புக்குத் தேவையான முக்கிய உதிரிபாகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொருட்களை ஏற்றுமதிசெய்யுமாறு, இந்தியாவிடம் ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நவம்பர் 7-ம் தேதி ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு முன்னதாக இந்தக் கோரிக்கையை, ரஷ்யா இந்தியாவுக்கு அனுப்பிஉள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. ரஷ்யாவில் முக்கியமான உதிரி பாகங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.
இதற்கிடையில், இன்ஜின், ஆயில் பம்ப், சீட் பெல்ட் உள்ளிட்ட கார் பாகங்கள், விமான சக்கரங்கள், பேப்பர் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள், ஜவுளித் தயாரிப்புக்கான இயந்திர பாகங்கள் உள்ளிட்ட 500 பொருட்களை அனுப்பும்படி, இந்தியாவுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஷ்யா உடனான வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு இது சிறந்த வாய்ப்பு என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது. குறைந்த அளவே ஏற்றுமதி செய்கிறது. சமீபகாலமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியாஅதிகரித்துள்ளது. இதனால், ரஷ்யா உடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது ரஷ்யா இந்தியாவிடமிருந்து முக்கிய பாகங்களை ஏற்றுமதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதால், இந்தியாவின் வர்த்தகப்பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி முதல்நவம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து ரூ.49 ஆயிரம் கோடி (6 பில்லியன் டாலர்) அளவுக்கு இறக்குமதி செய்துள்ளது. இந்த ஆண்டு அதுஐந்து மடங்கு உயர்ந்து, ரூ.2.3 லட்சம் கோடியாக (29 பில்லியன் டாலர்) உள்ளது. அதேசமயம், ஏற்றுமதி ரூ.19,680 கோடியிலிருந்து (2.4 பில்லியன் டாலர்) ரூ.15,580 கோடியாக (1.9 பில்லியன் டாலர்) குறைந்துள்ளது.
இந்த சூழலில், ரஷ்யா முக்கிய பாகங்களை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவிடம் கேட்டுள்ளதால், வரும் மாதங்களில் ரஷ்யாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி ரூ.82 ஆயிரம் கோடியாக (10 பில்லியன் டாலர்) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.