டேராடூன்: உத்தராகண்டில் கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தராகண்டில் ஆளும் பாஜக அரசு 2018-ம் ஆண்டு மத சுதந்திர சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி ஒருவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது குற்றம். இத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. ஆனாலும், லவ் ஜிகாத் மூலம் மதமாற்றம் நடைபெறுவதும் இதைத் தடுக்க சட்டத்தில் வழி இல்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, இந்த சட்டம் குறித்து மாநில காவல் துறை தலைவரிடம் (டிஜிபி) மாநில அரசு கருத்து கேட்டது. அப்போது இந்த சட்டத்தை மேலும் கடுமையாக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்தார்.
இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ம.பி., இமாச்சல் மாநிலங்களில் உள்ள சட்டங் களைப் போல உத்தராகண்ட் அரசு மதமாற்ற தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வரைவு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், உத்தராகண்ட் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், உத்தராகண்ட் மத சுதந்திரம் (திருத்த) மசோதா, 2022 தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. இதுதவிர, குற்றவாளிக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.