`தி காஷ்மீர் ஃபைல்’ – 2022 பிப்ரவரியில், இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே சர்ச்சைகள் தொடங்கின. மார்ச் 11, 2022 அன்று உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியான பிறகு பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க-வினர் பலரும் இந்தப் படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. எதிர்க்கட்சியினரோ, “இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பிரிவினையைத் தூண்டுகிறது இந்தப் படம்” எனக் குற்றம்சாட்டினர். படம் வெளியான சில மாதங்களில் இந்த சர்ச்சைகள் அடங்கிப் போயின. இந்த நிலையில், மீண்டும் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ தொடர்பான சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன.
என்ன சர்ச்சை?
கோவாவில் 53-வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியப் படங்கள், வெளிநாட்டுப் படங்கள் என ஏராளமான திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன. இந்த விழாவில், சர்வதேச திரைப்படப் போட்டித் தேர்வுக்கான குழுத் தலைவராக இருந்த இஸ்ரேலிய இயக்குநர் நாடவ் லேபிட் பேசியதுதான் மிகப்பெரிய சர்ச்சையாகியிருக்கிறது. விழாவின் இறுதி நாளில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரசாரப் படமான காஷ்மீர் ஃபைல்ஸ், இந்த சர்வதேச திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இழிவான இந்தப் படத்தைப் பார்த்து நான் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். விமர்சனங்களை இந்த திரைப்பட விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையாக இங்கு மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.
இதையடுத்து, நாடவ் பேச்சுக்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை வெளியிடத் தொடங்கினர். இந்தப் படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர், “நாவட் பேசியிருப்பது வெட்கக்கேடானது. சித்தி விநாயகர்தான் அவருக்குப் புத்தி கொடுக்க வேண்டும். பொய் எவ்வளவு உயரமானதாக இருந்தாலும், உண்மையுடன் ஒப்பிடுகையில் அது சிறியதாகவே தெரியும்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
வருத்து தெரிவித்த இஸ்ரேலிய தூதர்!
இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானதை அடுத்து இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலான் (Naor Gilon), “ விருந்தினரைக் கடவுள்களாக நினைப்பதுதான் இந்திய கலாசாரம். இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடுவர் குழுவின் தலைவராக உங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் உங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, மரியாதை, விருந்தோம்பல் ஆகியவற்றை நீங்கள் மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்துவிட்டீர்கள். இஸ்ரேல் மீதான இந்தியாவின் அன்பைக் கொண்டாடவே ஒரு இஸ்ரேலியரான உங்களையும், இஸ்ரேல் தூதராக என்னையும் அழைத்தார்கள் என நினைக்கிறேன். உங்களது கருத்துக்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும் நாடவ். உங்களது மோசமான நடத்தைக்காக நட்பு நாடான இந்திய மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், கோவா திரைப்பட போட்டிக் குழுவின் உறுப்பினரான சுதிப்தோ சென், “இது நாடவ்வின் தனிப்பட்ட கருத்து” என்று கூறியிருக்கிறார். `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, “இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல. ஏனென்றால், நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட சக்திகள் இப்படிச் சொல்வது வழக்கம்தான். ஆனால், அதிர்ச்சி என்னவென்றால் இந்தக் கருத்துச் சொல்லப்பட்டிருக்கும் இடம்தான். இந்திய அரசு ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் இவ்வாறு பேசப்பட்டிருக்கிறது. காஷ்மீரை, இந்தியாவிலிருந்து பிரிக்க விரும்புபவர்கள் சொல்லும் கருத்துதான் இது. இந்தப் படத்தைப் பிரசாரம் படம் என்பவர்களும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்… தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் வரும் வசனம், நிகழ்வுகள், ஒரு சிங்கிள் ஷாட் என எதுவுமே நிஜமல்ல என்பதை அந்த இஸ்ரேலிய இயக்குநர் உள்பட எவரேனும் நிரூபித்துக்காட்டினால், இனி படங்கள் இயக்குவதையே நிறுத்திக்கொள்கிறேன்” என்று காட்டமாகப் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
நாடவ் லேபிட் பேசியதிலிருந்து தற்போது வரை இந்தப் படம் தொடர்பான விவாதங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ சர்ச்சை இப்போது அடங்குவதாகத் தெரியவில்லை!