ஈராக்கை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹஷிமி அல்-குராஷி கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான ஆடியோ செய்தியில், “ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹஷிமி அல்-குராஷி “கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் எப்படி கொல்லப்பட்டார்? எப்போது கொல்லப்பட்டார்? என்பது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
அதே சமயம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக அபு அல்-ஹுசைன் அல்-ஹுசைனி அல்-குராஷி நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். 2014-ம் ஆண்டில் ஈராக் மற்றும் சிரியாவின் நிலப்பரப்பைக் கைப்பற்றுவதை எதிர்த்து “கலிபா” ஆட்சி முறையை சுய-பிரகடனப்படுத்திக் கொண்ட இயக்கம் ஐஎஸ்ஐஎஸ், 2017-ம் ஆண்டில் ஈராக்கிலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவிலும் தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து தீவிரவாதக் குழுவின் ஸ்லீப்பர் செல்கள் இரு நாடுகளிலும் தாக்குதல்களை நடத்திவருகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இதற்கு முன்னர் தலைவராக இருந்த ISIS தலைவர் அபு இப்ராஹிம் அல்-குராஷி, கொல்லப்பட்டார். அவருக்கு முன்னர் இருந்த தலைவர் அபூபக்கர் அலிபக்தாதி அக்டோபர் 2019-ல் இட்லிப் நகரில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.