காங்கிரஸின் 100 தலை ராவணன் கமெண்டுக்கு பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி

பஞ்சமஹால், குஜராத்: என்னை யார் அதிகம் கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று காங்கிரசில் போட்டி நிலவுகிறது…அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பிரதமர் மோதி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எதிர்வரும் 5ம் தேதி “தாமரைக்கு” வாக்களிப்பதே, காங்கிரஸ்  கட்சிக்கு பாடம் புகட்டும் வழி என்று குஜராத் தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். கலோலில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோதி, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தால் இந்த நிலைக்கு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு குடும்பத்தை நம்புகிறார்கள், ஜனநாயகத்தை அல்ல என்று சாடினார்.

ஒரு குடும்பம் மட்டும் தான் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம், அந்தக் குடும்பமே அவர்களுக்கு எல்லாமே தவிர, ஜனநாயகம் அல்ல, அந்தக் குடும்பத்தை  மகிழ்விக்க, அந்த கட்சியினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை சாடிப் பேசினார்.

நம்பிக்கை மற்றும் வழிபாட்டுத் தலங்களை அவமதிப்பதில் காங்கிரஸ் மகிழ்ச்சி அடைவதாகவும் மோடி குற்றம் சாட்டினார். ‘நாட்டின் பிரதமரை துஷ்பிரயோகம் செய்ய போட்டியிடும் காங்கிரஸ்’ என்றும், தேர்தல் தோல்விகளால் ‘மன சமநிலையை இழந்துவிட்டதாகவும்’ காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிப் பேசினார். குஜராத் மாநிலத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தின் கீழ் உள்ள வெஜல்பூர் பகுதியில் குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறிய கருத்து குறித்து பேசினார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நான் கார்கே ஜியை மதிக்கிறேன். அவர், அவருக்கு சொல்லப்பட்டதைச் சொல்வார். இது ராம பக்தர்களின் குஜராத் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியாது. “ராமபக்தர்களின்” இந்த நிலத்தில், “மோடி ஜி 100 தலை ராவணன்” என்று சொல்லும்படி அவரிடம் சொல்லப்பட்டதை அவர் பேசியிருக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஒரு நாள் முன்பு, தன்னை கார்கே செய்த கிண்டல்களை சுட்டிக்காட்டிய மோடி, “சமீபத்தில் ஒரு காங்கிரஸ் தலைவர் சொன்னார், ‘நாங்கள் மோடிக்கு அவருடைய தரத்தைச் சுட்டிக் காட்டுவோம் என்று’… நாங்கள் சேவகர்கள்… இப்போது, ​​காங்கிரஸ் உயர்மட்டக் குழு அதன் புதிய தலைவரை அனுப்பியுள்ளது… எனக்கு அவரைத் தெரியும், அவரை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் அவர் விஷயங்களைச் சொல்லப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்… ஆனால் குஜராத் ராம பக்தர்களின் தேசம் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவரை குஜராத்திற்கு வந்து மோடியை 100 தலைகள் கொண்ட ராவணன் என்று அழைக்கச் சொன்னார்கள்… ராமரின் அடையாளத்தைக் கூட காங்கிரஸ் ஏற்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் அவர்கள் ராமாயணத்தில் இருந்து ராவணனை ஒப்பிட்டுக்கு கொண்டு வந்துள்ளார்கள் என்று பிரதமர், தன்னை 100 தலை ராவணன் என்று சொன்னதற்கு பதிலடி கொடுத்தார்.

“எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும், அவர்களின் உயர்மட்டத் தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவில்லை… ஆம், ஒருவர் ஆவேசமாக தவறாக விஷயங்களைச் சொல்லியிருக்கலாம், ஆனால் மன்னிப்பு கேட்கலாம்… நாட்டின் பிரதமரை அவமதிக்கவும், பிரதமரை தரம் தாழ்த்தவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.  அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கை ஜனநாயகத்தில் இல்லை, ஒரே குடும்பத்தில் உள்ளது”.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.