கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பேருந்தும், மினி லாரியும் மோதிய விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து பயணிகளுடன் விருத்தாச்சலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இன்று காலை இரண்டு மணி அளவில் பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து இந்த விபத்தை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து சிங்காரப்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 14 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் சிக்கிய லாரி மற்றும் பேருந்து ஆகியவற்றை அப்புறப்படுத்திய போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.