2ம் கட்ட பிரசாரம் நாளை மறுநாள் ஓய்வதால் தீவிர வாக்குசேகரிப்பு
அகமதாபாத்: குஜராத் சட்டப் பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று 89 தொகுதிகளில் நடைபெற்றது. அதேநேரம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். குஜராத்தில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடந்த காலங்களில் இருமுனைப் போட்டி நிலவியது. ஆனால், இந்த முறை நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கி உள்ளதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ெமாத்தமுள்ள 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 25,430 வாக்குப்பதிவு மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
39 கட்சிகளை சேர்ந்த 70 ெபண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய, 19 மாவட்டங்களில் வாக்கப்பதிவு நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். காலை வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ராஜ்கோட்டிலும், மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் படேல், நவ்சாரியிலும் வாக்களித்தனர்.
பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர், வாக்காளர்கள் தங்களின் எதிர்காலம் கருதி வாக்களிக்குமாறும், இளைஞர்கள் அதிகளவில் வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டனர். காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் தனானி, தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்களிக்க சென்றார். அவர், வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வாக்களிக்க சென்றார். பாஜக ஆட்சியில் காஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை சுட்டிக் காட்டினார். பாஜக சார்பில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ராஜ்கோட்டில் வாக்களித்தார்.
அவர் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று நடைபெறும் தேர்தலில் சூரத், போர்பந்தர், கம்பாலியா, ராஜ்கோட், ஜாம்நகர் வடக்கு, மோர்பி ஆகியவை முக்கியமானவை ஆகும். கடந்த அக்டோபரில் 140க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவு வாங்கிய மோர்பி பாலம் அறுந்து விழுந்த தொகுதியிலும் தேர்தல் நடப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.
வாக்குபதிவு இயந்திரங்கள், அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 93 தொகுதிகளில் வரும் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் வரும் 3ம் தேதியுடன் (நாளை மறுநாள்) ஓய்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.