குஜராத் சட்டமன்ற தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவில் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து 7வது முறை ஆட்சிக் கட்டிலில் அமர பாஜக மும்முரம் காட்டி வருகிறது. அதேசமயம்
காங்கிரஸ்
, ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சரியாக காலை 8 மணிக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

1) –
மொத்தம் 19 மாவட்டங்களை சேர்ந்த 89 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் சூரத், ராஜ்கோட், பவ்நகர், ஜாம்நகர் ஆகிய முக்கிய நகரங்கள் அடங்கும். 14 சீட்கள் பழங்குடியின சமூகத்திற்கும், 7 சீட்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 788 வாக்காளர்கள் களத்தில் நிற்கின்றனர். அதில் 70 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2) –
இன்று நடக்கும் முதல்கட்ட தேர்தலில் 2.4 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1.2 கோடி பேர் ஆண்கள், 1.2 கோடி பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 497 பேர்.

3) –
இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை சேர்ந்த 11 அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள், கிரிட்சின் ராணா (லிம்ப்டி), கனு தேசாய் (பர்தி), ஜீது வாகனி (பவ்நகர் – பெண்கள்), ஹர்ஷ் சங்வி (மஜூரா), ஜீதுபாய் சவுத்ரி (கப்ரதா), பூர்னேஷ் மோடி (சூரத் – பெண்கள்), ராகவ்ஜி படேல் (ஜாம்நகர்), நரேஷ் படேல் (கந்தேவி), முகேஷ் படேல் (ஒல்பேடு), வினோத் மூராதியே (கடர்காம்), தேவா மலம் (கேஷோட்) ஆகியோர் ஆவர்.

4) –
முதல்கட்ட வாக்குப்பதிவிற்காக 25,430 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 13,065 வாக்குப்பதிவு மையங்களின் வாக்குப்பதிவு நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

5) –
பாஜகவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளார். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 140 இடங்களை கைப்பற்றி குஜராத்தில் புதிய வரலாற்றை படைக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

6) –
இம்முறை பாஜக மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்திருக்கிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், மாநில தலைவர்கள் ஆகியோர் பொதுக்கூட்டங்கள், பேரணி என தொடர்ந்து மும்முரம் காட்டினர்.

7) –
கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மேற்குறிப்பிட்ட 89 தொகுதிகளில் பாஜக 48, காங்கிரஸ் 38, பாரதிய பழங்குடியின கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

8) –
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மிகப்பெரிய மாவட்டமான சூரத்தில் மட்டும் 8 தொகுதிகளில் வெல்லும் என்று கணித்துள்ளார்.

9) –
குஜராத் மக்களின் சிந்தனையில் கூட ஆம் ஆத்மி துளியும் இல்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர்களுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று திட்டவட்டமாக கூறியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

10) –
குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் ஈடுபாடு பெரிதாக இல்லை என்று சொல்லப்படுகிறது. கடந்த முறை ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்த நிலையில், இம்முறை இந்திய ஒற்றுமை பயணத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ் முடிவுகள் எப்படியிருக்குமோ? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது கட்ட தேர்தல் வரும் 5ஆம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவு 8ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.