குஜராத் தேர்தல்: காங்கிரஸ் கோட்டையில் டமால்… குறிவச்ச பாஜக… வீறுகொண்ட ஆம் ஆத்மி!

நாடே எதிர்பார்த்த குஜராத் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதாவது, முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் 5ஆம் தேதி நடக்கிறது. தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறது. இதே உற்சாகத்துடன் இம்முறையும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற கனவில் களமிறங்கியுள்ளது.

மும்முனை போட்டி

கடந்த தேர்தலில் வீறுகொண்ட
காங்கிரஸ்
அடுத்தகட்டத்திற்கு செல்லும் வகையில் 2022 சட்டமன்ற தேர்தலை அணுக விரும்புகிறது. மேலும் புதிய வியூகத்துடன் ஆம் ஆத்மி களம் காண்கிறது. இந்த மும்முனை போட்டியில் யாருடைய கனவு பலிக்கப் போகிறது என்பது வரும் 8ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரிந்து விடும். பிரச்சார வியூகத்தை பொறுத்தவரை முதல்கட்ட தேர்தலுக்காக 23 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

பிரச்சாரக் கூட்டங்கள்

இதுதவிர உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்தனர். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் 19 பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். ராகுல் காந்தியை பொறுத்தவரை ராஜ்கோட், மகுவா என இரண்டு பிரச்சாரக் கூட்டங்களில் மட்டுமே கலந்து கொண்டார்.

காங்கிரஸ் அவ்வளவு தான்

கடந்த 2017 தேர்தலில் ராகுல் காந்தி கிட்டதட்ட 30 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். ஆனால் இம்முறை இந்திய ஒற்றுமை பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில் மற்ற காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சாரமும் குஜராத்தில் பெரிதாக எடுபடவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் இம்முறை பலத்த பின்னடைவை சந்திக்க வாய்ப்புண்டு.

மோடி vs அரவிந்த் கெஜ்ரிவால்

கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கை 34. இம்முறை இரண்டாம் கட்ட தேர்தல் இன்னும் எஞ்சியிருக்கிறது. அதற்கும் சேர்த்து பிரச்சாரம் செய்தால் 34ஐ அசால்ட்டாக முறியடித்து விடுவார். இவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பிரச்சாரக் களத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.

அமித்ஷா கொடுத்த டார்கெட்

பாஜகவை பொறுத்தவரை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஏனெனில் கடந்த முறை 78 தொகுதிகளில் வென்று பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்தனர். இது 1990க்கு பின்னர் அக்கட்சி பெறும் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இதன் காரணமாக பாஜகவின் வெற்றி 99ஆக சுருங்கியது. இது 1995க்கு பிறகான பின்னடைவாகும். இதனை மாற்றிக் காட்டும் வகையில் 140 என்ற இலக்கை பாஜகவினருக்கு அமித் ஷா நிர்ணயம் செய்துள்ளார்.

ஆம் ஆத்மி எழுச்சி பெறுமா?

ஆனால் ஆம் ஆத்மி டெல்லி மாடல், பஞ்சாப் வெற்றி ஆகியவற்றை முன்னுதாரணமாக வைத்து குஜராத் தேர்தலில் களம் காண்கிறது. அதுமட்டுமின்றி பிரச்சாரத்திலும் மிகுந்த கவனம் ஈர்த்துள்ளதால் வெற்றிக்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது பாஜகவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இருக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.