சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க நடவடிக்கை

டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கைக எதிர்பார்த்துள்ளது.

இதனால் சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதுவரையில் , ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்காக, அதிக எண்ணிக்கையிலான ஹோட்டல்களில், முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ மேலும் தெரிவிக்கையில், சுற்றுலாத் துறை எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினையாக மின் துண்டிப்பு காணப்படுகின்றது. இலங்கையில் 49 வலயங்கள் சுற்றுலா வலயங்களாக பெயரிட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அவற்றில் இதுவரை 14 வலயங்கள் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பெயரிடப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த பிரதேசங்களுக்கு இரவு நேரங்களில் மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.இது வரவேற்கத்தக்க ஆரம்பமாக நாம் இதனை நினைக்கின்றோம். ஏனென்றால் டிசம்பர் மாதம் இலங்கைக்கு பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற ஒரு பரபரப்பான மாதமாக மாறும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Mohamed Faizul/Press 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.