சென்னை விமான நிலையத்தில் ரூ.37¾ லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது துபாயிலிருந்து வந்த விமானதில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரிடம் சோதனை மேற்கொண்டதில் உள்ளாடைக்குள் தங்கும் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரிடம் இருந்த 25 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புள்ள 541 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வாலிபரை கைது செய்தனர்.
இதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் சூட்கேசில் துணிகளுக்கு இடையே வைத்து அமெரிக்கா டாலர்கள் கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.12 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.