சென்னை: பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் செயல்பட்டு வரும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்படும். மேலும், அந்த வளாகம் இனி ‘பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்’ என்று அழைக்கப்படும். சிறந்த பள்ளிகளுக்கு அவரது பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர் பேராசிரியர் அன்பழகன். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ரூ.7,500 கோடியில் ‘பேராசிரியர்அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக, நடப்பாண்டில் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசின் செயல்பாடுகள் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எனவே, நடப்பாண்டிலேயே பல்வேறு கட்டுமானங்கள், மராமத்துப் பணிகளுக்காக கூடுதலாக ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் செயல்பட்டு வரும் டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் சிலை நிறுவப்படுவதுடன், அந்த வளாகம் இனி‘பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’ என்று அழைக்கப்படும்.
மேலும், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைப் பண்பு, மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.