"டீக்கடையில் ரெட்டை கிளாஸ் முறை; மளிகை கடையில எந்தப் பொருளும் தருவதில்லை!" – பட்டியலின மக்கள் புகார்

ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமத்தில் தீண்டாமை கொடுமை நிலவுவதாகவும், பட்டியலின மக்களுக்கு கடைகளில் பொருள்கள் தருவதில்லை, டீ கடையில் இரட்டைகுவளை முறை நடைமுறையில் இருப்பதாகவும் புகார் எழுந்திருக்கிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக முடிதிருத்தும் கடையின் உரிமையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மூடப்பட்ட சனூன் கடை

ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாதிய பாகுபாடு, தீண்டாமை பிரச்னை நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த ஊரிலுள்ள டீக்கடையில் இரட்டைக் குவளை முறை இப்போதும் பின்பற்றபடுகிறது. முடி திருத்தும் கடையில் தங்களுக்கு முடிவெட்டுவதில்லை என கிளாமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே போலீஸிடம் மனு அளித்திருக்கின்றனர். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார், தீண்டாமை கொடுமை பிரச்னை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையத்திடமும் வலியுத்தியிருக்கிறார். இந்தப் பிரச்னை அந்தப் பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தீண்டாமை கொடுமை பிரச்னைக்குள்ளான கிராமம்

இது குறித்து ராஜேந்திரன் என்பவரிடம் பேசினோம். “எங்க ஊரில் பல ஆண்டுகளாக தீண்டாமைக் கொடுமைகள் நடந்து வருகின்றன. டீக்கடையில் இரட்டைக் குவளை முறை பின்பற்றபடுகிறது. பட்டியலின மக்களுக்கென தனியாக டீ கிளாஸ் வைத்திருக்கின்றனர். மளிகைக் கடையில் பொருள்கள் தருவதில்லை. எங்கள் பெண்கள் அவசரத்துக்கு நாப்கின் கேட்டால்கூட தருவது இல்லை.

முடிதிருத்தும் கடையில் எங்களுக்கு முடிவெட்டுவதில்லை. 2000, 2004-ம் ஆண்டுகளில் தீண்டாமை கொடுமை தொடர்பாக பிரச்னை நடந்தது. அதுமட்டுமல்ல ஐந்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது தொடர்பாக அந்த சமயங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலை, இன்னும் தொடர்வதால் பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்.

ஆனால், போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த மாற்றுச் சமூகத்தினர் ஊர்க்கூட்டம் கூட்டி மளிகைக் கடையில் பொருள்கள் தரக்கூடாது, முடி வெட்டிவிடக்கூடாது, ஆடு, மாடு மேய்க்க விடக்கூடாது என உத்தரவு போட்டார்கள். எங்கள் இளைஞர்கள் முடிவெட்டச் சென்றால் கடைக்காரர் மூடிவிட்டுச் சென்று விடுவார். பால் உள்ளிட்ட பொருள்கள்கூட மளிகைக் கடையில் தரமாட்டார்கள்.

இந்த விவகாரம் மே 19 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கவனத்துக்குச் சென்ற பிறகு, அவர் மாவட்ட உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதன் பிறகு தாசில்தார் உள்ளிட்டவர்கள் விசாரணை மேற்கொண்டு தீண்டாமை கொடுமை நிலவுவதை உறுதி செய்தனர். நாங்கள் 16 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருக்கிறோம். இனி எங்கள் ஊரில் தீண்டாமை கொடுமை இல்லாமல் முழுமையாகப் பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். நாங்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

கைது

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் பேசினோம். “முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் வீரமுத்து என்பவர்மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்திருக்கிறோம். ஊரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.

இது குறித்து அந்த கிராமத்தில் வசிக்கும் மாற்றுச் சமூகத்தினர் சிலரை கேட்டதற்கு, “எங்க ஊரில் எந்தப் பிரச்னையும், எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. ஒற்றுமையுடன் இருந்து வருகிறோம். வெளியூரைச் சேர்ந்த சிலர் எங்க ஊர் இளைஞர்களை தூண்டி விடுகின்றனர். மளிகைக் கடையில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என்பது விதி. கடையில் பெட்ரோல் கேட்டு இல்லை எனக் கூறியதை, தீண்டாமை கொடுமை என்கிறார்கள்” என்று கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.