தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் கிராமத்தில், டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடித்திருத்தும் கடையில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் பல ஆண்டுகளாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த அக். 2ஆம் தேதி ஒரத்தநாடு தாசில்தாரிடம் இதுகுறித்து புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம அலுவலர் ஆய்வு செய்து தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து அறிக்கை அளித்துள்ளார். அதன் பிறகு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாற்று சமூகத்தினர், பட்டியலின மக்கள் யாருக்கும் மளிகை கடைகளில் பொருள் வழங்கக் கூடாது, முடிதிருத்தம் செய்யக்கூடாது என கிராம கட்டுப்பாடு தடை வித்துள்ளதாக கூறினர். மேலும், ஆதி திராவிடர் தெருவுக்கு குடிநீர் வராமல் தடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில், ஆதி திராவிடர் சமுகத்தைச் சேர்ந்த ஒருவர் பெட்ரோல் கேட்டபோது “உங்களுக்கு தரக் கூடாது என கிராமத்தில் தடை விதித்து இருக்கின்றனர்” என மளிகை கடைக்கார் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது தொடர்பாக ஒரத்தநாடு தாசில்தார் சுரேஷ் கிளாமங்கலம் கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்து அப்பகுதி மாற்றுசமூகத்தினர் கூறுகையில், “அனைவரும் அண்ணன் தம்பி போல் பழகி வருகிறோம். இதுவரை நாங்கள் அவர்களை தாக்கியதும் இல்லை, அவர்கள் எங்களை தாக்கியதும் இல்லை. ஆனால், ஊர் முழுவதும் காவல் துறையினர் ஏன் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் தெரியவில்லை. வெளியில் இருந்து கொண்டு ஊரில் உள்ள இளைஞர்களை சிலர் தூண்டி விடுகின்றனர். பெட்ரோல் இல்லையென அவர் கூற காரணம், அங்கு பெட்ரோல் இல்லை என்பதால்தான். தவிர ஊரில் தீண்டாமை என்பது இல்லை” என தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பாப்பாநாடு காவல் துறையினர் கிளாமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் தெற்கு கிராமத்தில் உள்ள டீ கடையில் இரட்டை குவளை முறையும், முடித்திருத்தம் செய்யும் கடையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடிதிருத்தம் செய்யாமலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக 2.10.2022 அன்று வட்டாட்சியருக்கு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு ஆர்ஐ மற்றும் விஏஓ ஆய்வு செய்து தீண்டாமை இருப்பதை உறுதி செய்தனர். இதன் பின் குற்றம் செய்தவர்கள் “இனி இதுபோன்ற தீண்டாமையை கடைபிடிக்க மாட்டோம்” என எழுத்து பூர்வமாக அதிகாரியிடம் தெரிவித்தனர்.
ஆனால், 25.11.2022 அன்று முதல் மீண்டும் தீண்டாமை முறையை மேற்கொள்வதாகவும் மேலும் 28.11.2022 அன்று “குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட யாருக்கும் மளிகை கடையில் பொருள் வழங்கக் கூடாது. முடிதிருத்தம் செய்யக்கூடாது. இது கிராம கட்டுப்பாடு” என கூறி ஒரு மளிகை கடை உரிமையாளர் குழந்தைக்கு தேவையான பொருட்கள் தராமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் ஆதி திராவிடர் மக்களுக்கு மளிகை பொருள் வழங்கினால் ரூ.5000 அபராதம் என ஊர்க்கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும் தெரிகிறது.
அதேபோல், தங்களின் வயல்வெளி நிலங்களில் உள்ள மேச்சல் நிலங்களில் ஆடு மாடுகள் மேய்கக்கூடாது எனவும் பட்டியலின மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் வட்டாட்சியர் டிஎஸ்பி தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM