சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியின் 14 ஆவது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த வெங்கடாசலம் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மேட்டூர் நகராட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பங்கேற்க திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் அவரது மனைவியுடன் நகராட்சி வளாகத்திற்கு கார் மூலம் வந்தார்.
திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் காரை விட்டு இறங்கிய போது மறைந்திருந்த மர்ம கும்பல் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அறிவாளால் வெட்டியது. வெங்கடாஜலத்தின் அலற சத்தம் கேட்டு மாமன்றத்தில் இருந்த கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வரவே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதில் படுகாயம் அடைந்த திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேட்டூர் நகராட்சி வளாகத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரை வெட்டிய சம்பவம் மேட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.