கூடலூரில் திமுக கவுன்சிலர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி 18-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சத்தியசீலன். இவர் வீடுகட்ட அனுமதிக்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இன்று காலை வெளியானது. வெளியான உடனே பலராலும் அது பகிரப்பட்டது. சம்பந்தபட்ட கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தபட்டு வருகிறது. இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வீடியோ குறித்து கவுன்சிலர் சத்தியசீலனிடம் கேட்டபோது, “இது 6 மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட விடியோ. அப்போது நகரமன்ற தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்த பரிமளா என்னை அழைத்து,`ஒப்பந்தாரர் ஒருவர் வருவார், அவருடன் சென்று ஏழுமரம் பகுதியில் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தருவார். அந்த பணத்தை பெற்று என்னிடம் கொடுக்க வேண்டும்’ என்றார்.
அவர் சொன்னது போலவே பணத்தை பெற்று தலைவர் பரிமளாவிடம் கொடுத்துவிட்டேன். சமீபத்தில் தலைவர் பரிமளா, ஒப்பந்தாரர்களிம் 7.20 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்று, அதில் பல முறைகேடுகளை செய்துள்ளார். இதனை மன்ற கூட்டத்தில் வைத்து அனைத்து கவுன்சிலர்கள் முன்னிலையில் கேட்டேன். அதை திசை திருப்பவே 6 மாதத்திற்கு முன்பு எடுத்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்” எனக் கூறினார். மேலும் தலைவர் பரிமளா சொல்லி, அதன்பேரில் ஒப்பந்தாரர் தன்னை பணம் வாங்க அழைத்துச் சென்றதை அவரே ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கவுன்சிலர் சத்தியசீலன் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கவுன்சிலர் சத்தியசீலனின் குற்றசாட்டு குறித்து நகரமன்ற தலைவர் பரிமளாவிடம் பேசினோம். அவர் பேசுகையில், “கவுன்சிலர் என் மீது பொய்யான குற்றச்சாட்டை முன் வைக்கிறார். என் மீது அவதூறு பரப்பும் கவுன்சிலர் மீது உரிய இடத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பேன்” எனக் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM