சண்டிகர்: குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்றும் வரும் 5-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குஜராத் வந்துள்ளார்.
இந்நிலையில், பஞ்சாபின் சங்ரூரில் உள்ள முதல்வரின் வீட்டு முன் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் வேலை திட்டத்தில் குறைந்தபட்ச கூலியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் – போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி விவசாயிகளை கலைத்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில் இந்தப் போராட்டத்தை பாஜக தூண்டிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.