சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, பாதுகாப்புஏற்பாடுகளில் எவ்வித குளறுபடியும் ஏற்படவில்லை என்று டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக காவல் துறை உளவுப் பிரிவு ஏடிஜிபிஅக். 30-ம் தேதி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘பிரதமர்பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் திருப்திகரமாக இல்லை. அவற்றைப் பழுதுபார்க்கவோ, பயனற்றுப்போகும் கருவிகளை அப்புறப்படுத்தவோ முயற்சிக்கவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களிலும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து, அகற்றும் குழுவினரிடம் உள்ள கருவிகளை, அந்தந்த மண்டல ஐ.ஜி.க்கள், மாநகர காவல் ஆணையர்கள் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளி யாகின.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘‘செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் சென்னைக்குவந்தபோது, அவருக்குப் பாதுகாப்பு தர வேண்டிய பணியில் இருந்து மாநில அரசு தவறி விட்டது. பல மெட்டல் டிடெக்டர் கருவிகள் வேலைசெய்யவில்லை’’ என்று புகார் கூறியிருந்தார்.
இதற்கிடையே, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ‘சைபர் பாதுகாப்பு: சிக்கல்கள், போக்குகள்’ என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்கில் டிஜிபி சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பல்கலை. துணைவேந்தர் எஸ்.கவுரி, ஃப்யூச்சர்கால்ஸ் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் பெ.ஜெகநாதன், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ் குமார், ஏசியன் கிரிமினலாஜிக்கல் சொசைட்டி தலைவர் ஆர்.திலகராஜ், சென்னை பல்கலை. சைபர் தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மைய இயக்குநர் (பொறுப்பு) எஸ்.லதா, சட்டப் பல்கலை. சைபர் தள சட்டம் மற்றும் நீதித் துறை தலைவர் ரஞ்சித் உம்மன் ஆபிரகாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:
நவீன தொழில்நுட்பத்துடன் உபகரணங்கள்
பிரதமர் தமிழகம் வந்தபோது, பாதுகாப்பில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை. பிரதமருக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டது. தமிழககாவல் துறையில் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களும் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகின்றன. காலாவதியாகும் உபகரணங்களுக்குப் பதிலாக வேறு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன. தற்போது போதுமான அளவுக்கு,தரமான, நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடியஉபகரணங்கள் காவல் துறைக்கு வழங்கப்படுகின்றன. மற்ற மாநிலங்கள், தமிழகத்திடம் கேட்டு வாங்கும் அளவுக்கு தரமாக உள்ளன.
தமிழகம் தொடர்பான 15 வழக்குகளை என்ஐஏ விசாரிக்கிறது. அதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் எங்களுடன் ஆலோசித்தனர்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக வரும் தவறான குறுஞ்செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு டிஜிபி கூறினார்.