அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியை இழிவாகப் பேசிய காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மக்கள் தங்கள் வாக்குப் பெட்டி மூலம் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று(டிசம்பர் 1) நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 19.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்குகளை அளித்து வருகின்றனர். வாக்காளர்கள் எளிதாக வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இன்றைய தேர்தலில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 25,430 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குஜராத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. 93 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரம் நாளை மறுநாளுடன் (டிசம்பர் 3) முடிவுக்கு வர உள்ளது. இதை முன்னிட்டு இந்த தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் புபேந்திர படேல், மெஹ்சானா மாவட்டத்தில் வாகனத்தில் இருந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக பயணித்து வாக்குகளை கோரினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 3.30 மணி அளவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். நாரதா காம் என்ற இடத்தில் இருந்து காந்திநகர் தெற்கு தொகுதி வரை அவர் சாலைமார்க்கமாக பயணித்து வாக்குகளை கோர இருக்கிறார்.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகமதாபாத் நகரில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சாலையில் வாகனத்தில் பயணித்தவாறு அவர் வாக்குகளை கோரினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறார். குறிப்பாக, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டன. மின்சார பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மாணவர்களின் இடைநிற்றல் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது.
இம்முறை பாஜகவின் தேர்தல் அறிக்கையில், தீவிரவாத மனநிலையுடன் இருக்கக்கூடிய அடிப்படைவாதிகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்காக தீவிரவாத தடுப்புப் பிரிவு (Anti-radical Cell) உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான, முற்போக்கான வாக்குறுதி. இந்த பிரிவு அடிப்படைவாதத்தைக் கட்டுப்படுத்தும். இதன்மூலம் பயங்கரவாதத்தையும் கலவரங்களையும் கட்டுப்படுத்த முடியும்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை ராவணன் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் நரேந்திர மோடியை கடும் சொற்களால் விமர்சிக்கிறதோ அப்போதெல்லாம், குஜராத் மக்கள் தங்கள் வாக்குப் பெட்டி மூலம் அக்கட்சிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இம்முறையும் அப்படி ஒரு பதிலடியை குஜராத் மக்கள் அளிப்பார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.