`பிரபலமடைவதன் மூலம்…' – 12 மணி நேர அமலாக்கத்துறை விசாரணை குறித்து விஜய் தேவரகொண்டா விளக்கம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கடந்த 2011-ம் ஆண்டு நுவ்விலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்களின் மூலம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த நிலையில், பிரபல இயக்குநரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான லைகர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வெளியானது. அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்து, பெரும் பொருள்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

விஜய் தேவரகொண்டா

இந்த படத் தயாரிப்புக்கு 125 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக செய்யப்பட்ட முதலீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த பட தயாரிப்புக்காக ஹவாலாப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொண்டது. படத்தின் தயாரிப்பாளரான ஷர்மி, இயக்குநர் பூரி ஜெகன் நாத் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். காலை 8 மணி அளவில் ஹைதராபாத் அமலாக்க இயக்குநரகத்தில் தொடங்கிய விசாரணை, இரவு 8.30 மணி வரை தொடர்ந்தது.

விஜய் தேவரகொண்டா

12 மணி நேர விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய் தேவரகொண்டா, “பிரபலமடைவதன் மூலம் சில அசௌகரிய நிலைகளும் ஏற்படுகின்றன. இதுவும் எனக்கு ஒரு அனுபவம். இதுதான் வாழ்க்கை. அமலாக்கத்துறையிடமிருந்து விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். அதனால் நான் ஆஜராகி என் கடமையை செய்தேன். அவர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறேன். அவர்கள் மீண்டும் என்னை அழைக்க மாட்டார்கள்” என விளக்கமளித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.