பிரிட்டனில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான பிரிட்டன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இங்கிலாந்தில் முஸ்லீம்களின் மக்கள்தொகை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கூடுதல் ஆச்சரியமாக வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. சிறுபான்மை மக்கள் தொகையை விட, பிரிட்டனின் அதிகாரப்பூர்வ மதமான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்ட தரவுகளின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மக்கள்தொகையில் சுமார் 46.2 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இது 59.3 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 46.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 4.9 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் 1.5 சதவீதத்தில் இருந்து 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் அதிகம் பின்பற்றப்படும் மதமாக கிறிஸ்தவம் இருந்தாலும் அது வேகமாக குறைந்து வருகிறது. கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக, மதச்சார்பற்றவர்கள் அங்கு அதிகம் இருக்கின்றனர் என்பதும் சமீபத்திய புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
பிரிட்டன் மக்கள் தொகை தரவுகளின்படி, இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களின் மக்கள்தொகை 3.9 மில்லியனாக உள்ளது. அதனைத்தொடர்ந்து, இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் மக்கள்தொகை 10 லட்சமாகவும், சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்களின் மக்கள்தொகை 5.24 லட்சமாகவும் உள்ளது.
தேர்தலுக்கு ரெடியான மோடி: பிரணாய் ராய் விலகல் பின்னணி?
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சுமார் 27.5 மில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளனர். இது 2011ஆம் ஆண்டை விட 13.1 சதவீதம் குறைவாகும். சுவாரஸ்யமாக, பிரிட்டனில் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களின் மக்கள்தொகை, யூத மதத்தை பின்பற்றுபவர்களின் மக்கள்தொகையை விட அதிகரித்துள்ளது. பௌத்த மதத்தை 2,73,000 லட்சம் பேரும், யூத மதத்தை 2,71,000 லட்சம் பேரும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 82 சதவீத மக்கள் வெள்ளையர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது 2011ஆம் ஆண்டில் 86 சதவீதமாக இருந்தது. 9 சதவீதம் பேர் ஆசியர்கள் எனவும், 4 சதவீதம் பேர் கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் எனவும், 3 சதவீதம் பேர் கலப்பு அல்லது பல இனப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் எனவும், 2 சதவீதம் பேர் பிற இனக்குழுவை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூன்று பேரில் ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் என தெரிவித்துள்ளனர். அதாவது மத சார்பற்றவர்கள் என தெரிவித்துள்ளனர். எந்த மதத்தையும் சாராதவர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தில் இருந்து 37.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் அதிகம் பின்பற்றப்படும் மதமாக கிறிஸ்தவம் இருந்தாலும் அது வேகமாக குறைந்து வருகிறது எனவும், கிறிஸ்தவர்களுக்கு அடுத்தப்படியாக எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் இருக்கிறார்கள் எனவும், இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும் பிரிட்டன் தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிரிட்டனின் மற்ற பகுதிகளான ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை தனித்தனியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கின்றன.
இதுகுறித்து யோர்க் பேராயர் ஸ்டீபன் காட்ரெல் கூறுகையில், இங்கிலாந்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவதில் ஆச்சரியமில்லை என்கிறார். ஆனால், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் உக்ரைன்-ரஷ்யா மோதல்களின் மத்தியில் ஆன்மீகம் இன்னும் மக்களின் தேவையாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையை மேம்படுத்த கடினமாக உழைக்க வேண்டியது சவாலாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“பலர் தானாகவே தங்களை கிறிஸ்தவர்களாக அடையாளம் காணப்பட்ட சகாப்தத்தை நாம் விட்டுவிட்டோம், ஆனால் அதே மக்கள் இன்னும் ஆன்மீக உண்மை, ஞானம் மற்றும் வாழ வேண்டிய மதிப்புகளின் தொகுப்பை எவ்வாறு தேடுகிறார்கள் என்பதை மற்ற ஆய்வுகள் தொடர்ந்து காட்டுகின்றன.” எனவும் யோர்க் பேராயர் ஸ்டீபன் காட்ரெல் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மனிதநேயவாதிகளின் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ காப்சன் கூறுகையில், மதமற்றவர்களின் வியத்தகு வளர்ச்சியானது, பிரிட்டனை மிகக் குறைந்த மதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது. இந்த முடிவுகளின் குறிப்பிடத்தக்க விஷயங்களில் ஒன்று, நாட்டில் மக்கள் தொகை எவ்வாறு முரண்படுகிறது என்பதுதான். சட்டம் மற்றும் பொதுக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டனில் உள்ளது போன்ற ஒரு மத அமைப்பை எந்த ஒரு ஐரோப்பிய நாடும் கொண்டிருக்கவில்லை. அதே நேரத்தில் மதம் சாரா மக்கள்தொகையையும் நாம் கொண்டுள்ளோம்.” என்றார்.
மதம் தொடர்பான கேள்வி, கடந்த 2001ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டது. மதம் தொடர்பான கேள்விக்கு தானாக முன்வந்து பதில் அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.