ஸ்கொட்லாந்தில் பேருந்துக்காக காத்திருந்த இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இனவெறித்தாக்குதல்
ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பர்கில் வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த பினு (Binu Chavakamannil George), வழக்கம்போல பணி முடித்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையம் ஒன்றில் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர் பினுவை இனரீதியாக விமர்சித்துள்ளனர். உடனே அங்கிருந்து அகன்று சென்றுள்ளார் பினு.
ஆனாலும் விடாமல் பினுவைப் பின் தொடர்ந்த அந்த இளைஞர்கள் அவரைத் தாக்கியுள்ளார்கள்.
கடுமையான தாக்குதல்
பினுவின் முகத்தில் அந்த இளைஞர்கள் தொடர்ந்து குத்தியதால் அவர் மயக்கமடைய, அந்த இளைஞர்களில் ஒருவர் அவரது பையை எடுத்துக்கொள்ள, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்கள் அவர்கள்.
அங்கிருந்த மக்களில் சில பொலிசாருக்கு தகவலளிக்க, பினுவுடன் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்களும் தகவலறிந்து அங்கு வந்து சேர, மருத்துவ சிகிச்சைக்குப் பின் பொலிசார் பினுவை அவரது வீட்டிற்க் கொண்டு சேர்த்துள்ளனர்.
12 வருடங்களாக தான் அந்த பகுதியில் வேலை செய்து வரும் நிலையில், திடீரென தன் மீது இனரீதியாக தாக்குதல் நடத்தப்பட்ட விடயம் தன்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் பினு.
பொதுவாக இனவெறி தாக்குதல்கள் குறைவாக உள்ள ஸ்கொட்லாந்தில் இதுபோன்ற தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருவது இந்திய சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக, ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் ஸ்கொட்லாந்துக்கு வருவது அதிகரித்துள்ள விடயம், உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதையே இந்த தாக்குதல் காட்டுவது குறிப்பிடத்தக்கது.