நியூடெல்லி: தன்னை பலாத்காரம் செய்த 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக பில்கிஸ் பானோ மனு தாக்கல் செய்துள்ளார். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, தன்னைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மனு செய்துள்ளார். 1992 ஆம் ஆண்டு நிவாரண விதிகளைப் பயன்படுத்தி, 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 11 குற்றவாளிகளை விடுதலை செய்யும் தீர்ப்பு தொடர்பாக பில்கிஸ் பானோ மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் 11 பேரும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள். 14 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்றுவந்த நிலையில், குற்றவாளிகள் விடுதலைக் குறித்து குஜராத் மாநில அரசு ஒரு குழுவை அமைத்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இதனையடுத்து 10 பேர் கொண்ட குழுவை குஜராத் மாநில அரசு அமைத்தது. அந்தக் குழுவினர் அனைவரும் குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்று ஒருமனதாக முடிவு எடுத்ததை அடுத்து 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளின் விடுதலைக்கு மூல காரணமாக அமைந்தது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால், அதனை சீராய்வு செய்ய வேண்டும் என்றும் பில்கிஸ் பானு தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு அவசரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டிடம், பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தா வலியுறுத்தினார். மேலும், திறந்த நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
அதனை அடுத்து, மனுவை பரிசீலனை செய்வதாக தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், விசாரணை முறையை நீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என்று கூறினார். 2008ஆம் ஆண்டு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டபோது குஜராத்தின் அமலில் இருந்த நிவாரணக் கொள்கையின்படி, ஆயுள் தண்டனைக் கைதிகள் 11 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
2002 பிப்ரவரி 27 அன்று, குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ஒரு கும்பலால் எரிக்கப்பட்டதில் 59 பேர் இறந்தனர். இந்த கோத்ரா சோகத்திற்குப் பிறகு, பில்கிஸ் பானோ கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது பில்கிஸ் பானு ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார், இந்த சம்பவத்தில் அவரது குழந்தை கொலை கொல்லப்பட்டது.