டெல்லி : மேகதாது அணை கட்டுவதற்கு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் மராட்டியம் உடனான எல்லை பிரச்சனை குறித்து கர்நாடக அரசு சார்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் நேரில் சந்தித்து காவேரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு அனுமதி வழங்க ஆவணம் செய்யுமாறு வலியுறுத்தினார். கர்நாடகாவில் விரைவில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பிரச்னையை பசவராஜ் பொம்மை கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில் மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி பெரும் முனைப்பில் மாநில பாஜக தலைவர்களும், டெல்லிக்கு தொடர்ந்து படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.