தமிழ்மொழியை 2-வது மொழியாக சேர்க்குமாறு, வடகிழக்கு மாநில முதல்வர்களிடம் வலியுறுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில், தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் பயின்ற 1.66 லட்சம் பேருக்கு பட்டங்களும், கல்வியில் சிறந்த 49 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
தற்போதைய சூழலில், புத்தகக் கல்வி மட்டும் போதாது. திறன் சார்ந்த கல்வி அவசியம். இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்தநாடாக மாறியிருப்போம். போட்டிகள் நிறைந்த தற்போதைய சூழலில், வளர்ச்சி என்பது எளிதாகஇருக்காது. கடுமையாக முயன்றால்தான், முன்னேற முடியும்.
தமிழகம் மற்ற மாநிலங்களைவிட, பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. திருக்குறளை பிற மாநிலங்களின் பாடத் திட்டங்களில் சேர்க்க மொழிபெயர்க்க வேண்டும். அதன் ஒருபகுதியாகவே, காசி தமிழ்ச் சங்கமத்தில், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலைபிரதமர் வெளியிட்டார்.
வடகிழக்கு மாநிலங்களில் தமிழ்மொழியை 2-வது மொழியாக இணைக்குமாறு அந்த மாநிலங்களின் முதல்வர்களிடம் நான் வலியுறுத்தி வருகிறேன். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
அமைச்சர் பொன்முடி பேசும்போது, “தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கான பட்டமளிப்பு விழா அரங்கம் விரைவில் அமைக்கப்படும்.
ஆரம்பக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியை மேம்படுத்த, முதல்வர் பல்வேறு நடவடிக்கைஎடுத்து வருகிறார். கல்வித் துறையில் நாட்டுக்கே முன்னோடிமாநிலமாக தமிழகம் உள்ளது. படிக்கும்போதே பல்வேறு தொழில்முனைவோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்சார்ந்த கல்வியை உருவாக்கவேண்டும். கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய கல்விமுறையைஉருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணா வலியுறுத்தியபடி, தமிழகம் இருமொழிக் கொள்கையிலேயே பயணிக்கிறது.
உயர்கல்வியில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய உள்ளோம்” என்றார். நிகழ்ச்சியில், மணிப்பூர் ஐஐஐடி இயக்குநர் கிருஷ்ணன் பாஸ்கர், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.பஞ்சநதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. போட்டிகள் நிறைந்த சூழலில், வளர்ச்சி என்பது எளிதாக இருக்காது. கடுமையாக முயன்றால்தான், முன்னேற முடியும்.