மாநிலங்களுக்கிடையே தற்காலிக போக்குவரத்துக்கு அனுமதி பெற ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தினசரி லட்சக்கணக்கான வணிக வாகனங்கள் தமிழகத்திற்கு வருகிறது. தமிழகம் முழுவதும் இதற்காக மாநில எல்லைகளில் 22 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அனுமதி பெற்ற பின் வாகனங்கள் தமிழகத்திற்கு உள்ளே பயணம் செய்ய போக்குவரத்து துறையால் அனுமதிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பணப்பரிவர்த்தனையின் போது தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் தமிழகத்திற்குள் பயணம் செய்ய நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக பணம் வசூலிக்கும் நிலை இருப்பதாகவும் புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் வழியாக தற்காலிக அனுமதி பெறும் நடைமுறையை தமிழக அரசு துவக்கியுள்ளது. அதன்படி தற்காலிக அனுமதி (Temporary Permit) மாநிலத்தில் உள்ள அனைத்து 22 எல்லை சோதனைச் சாவடிகளிலும் ஆன்லைன் வழியே கட்டணத்தை செலுத்திக் கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.
இதன் மூலம் லட்சக்கணக்கான சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வணிக வாகனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த மாதம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் முறையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பிக்கும் போது, ரசீது தானாகவே QR குறியீட்டுடன் உருவாக்கப்படும். இதனால் அதிகாரிகள் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும் எளிதில் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில் இந்த நடைமுறை வாகன உரிமையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM