நாகப்பட்டினம் முதல் கூடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகள் 2017 ஆம் ஆண்டு முடிந்திருக்க வேண்டிய நிலையில், கால தாமதமாக பணிகள் தொடங்கப்பட்டதால் தற்போது வரை அங்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வாய்க்கால் இருப்பதை கூட பார்க்காமல் பழமைவாய்ந்த 3 வாய்க்கால்களை அடைத்து சாலை அமைத்து இருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சிக்குட்பட்ட பனை மேடு பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் பிரிவு வாய்க்காலான கார் வாய்க்காலை முழுவதுமாக சாலையாக நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்துள்ளதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விவசாயிகள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் நம்மிடையே வேதனை தெரிவிக்கின்றனர்.
வாய்க்கால்கள் மூடப்பட்டது குறித்து அப்பகுதி விவசாயிகளின் கொடுத்த புகாரை அடுத்து கான்கிரீட் பாலம் அமைப்பதற்கு பதிலாக தரமற்ற சிமெண்ட் குழாய்களை அதிகாரிகள் அமைத்ததாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இதனால் நீர் செல்லக்கூடய 7 கண்மாய்கள் அடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் பெய்த கனமழை ஏற்பட்ட வெள்ளநீர், வெளியேற வழி இல்லாமல் அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் தாளடி விளைநிலங்களில் தேங்கி குளம் போல காட்சி அளிப்பது இதற்கு சாட்சியாக இருக்கிறது. நீர் தேக்கம் காரணமாக நெற்பயிர்கள் அழுகி பாதித்து இருப்பதாகவும் செலவு செய்த தொகை முழுவதும் நஷ்டமாகி உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நம்மிடையே வேதனை தெரிவித்துள்ளனர். வாய்க்கால்களை அடைத்துள்ள காரணத்தால் சிக்கல், சங்கமங்கலம், ஐயவநல்லூர், பாலையூர், மஞ்சக்கொள்ளை, உள்ளிட்ட 12 கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதேபோல் சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை பாஸ்கர் என்பவரிடம் நான்கு இடங்களை கையகப்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் சதுர அடி 1100 ரூபாய் வரை விலை போகும் நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு ஒரு சதுர அடிக்கு 1.80 காசுகள் நிர்ணயம் செய்யப்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்ட பாஸ்கர் பணத்தை பெறாத நிலையில் இருக்கிறார். மேலும் கார் வாய்க்காலை முழுவதுமாக அடைத்து அருகே உள்ள பாஸ்கரின் கட்டடத்தையும் கையகப்படுத்த நெடுஞ்காலைத்துறை முயற்சி செய்வதாகவும் புகார் தெரிவித்துள்ள பாஸ்கர், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அங்கு ஆய்வுக்கு வந்தபோது அவரிடம் நியாயம் கேட்டு நீண்ட நேரம் நேற்று போராடினார்.
இந்த நிலையில் விவசாயிகளின் நிலையறிந்து, அவர்களது புகாரை கேட்டறிந்த நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வுசெய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் சாலைபணிகள் நடைபெறும் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த விவசாயிகள் ஆய்வு செய்ய வந்த தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் உதயசங்கரை சூழ்ந்து கொண்டு பாசன மற்றும் வடிகால் வாய்க்காலை அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது நெடுஞ்சாலை திட்ட இயக்குனர்களிடம் இது குறித்து கேட்டபோது, அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுக்க தயாராக இல்லை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM