டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஸ்வரூப் நகரில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கை துப்பாக்கியுடன் நடனமாடும் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஸ்வரூப் நகரில் போட்டியிடும் ஜோகிந்தர் சிங் என்பவர் கை துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ஜோகிந்தர் சிங் கை துப்பாக்கியுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் டெல்லி போலீசார் தாமாக முன்வந்து ஜோகிந்தர் சிங் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லி மாநகராட்சி தேர்தல் சீட் ஒதுக்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ், தொண்டர்களால் தாக்கப்படுவதாக வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக தீவிர அரசியலை முன்னெடுத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM