பயன்படுத்தாத 25 அடி ஆழ உரை கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை ஒன்றரை மணி நேரம் போராடி பத்திரமாக மீட்ட ஆவடி தீயணைப்பு மீட்பு படையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (55). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வீட்டின் அருகில் இருந்த உரை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவரை மீட்க உறவினர்கள் முயற்சி செய்தும் முடியாததால் உடனடியாக ஆவடி தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலைய அதிகாரி சண்முகம் தலைமையிலான தீயணைப்பு மீட்பு குழுவினர். 3 அடி விட்டம் 25 அடி ஆழம் கொண்ட பயன்படுத்தாத உரை கிணற்றில் கயிறு கட்டி உள்ளே இறங்கிய வீரர், சந்திரசேகரை கயிறு மூலம் கட்டி லாவகமாக மேலே தூக்கி வந்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி துர்நாற்றம் வீசிய நீருக்குள் இருந்தவரை உயிருடன் மீட்ட ஆவடி தீயணைப்பு மீட்பு குழுவினரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
