
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி லைகர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பூரிஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சார்மி தயாரித்தார். விஜய் தேவரகொண்டா நடத்திருந்த லைகர் திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியானது.
அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசனையும் படத்தில் நடிக்க வைத்திருந்தனர். நடிகை ரம்யா கிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுமார் 125 கோடி செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் 30 விழுக்காட்டை கூட வசூலிக்கவில்லை.

இந்நிலையில் லைகா் படத்தை தயாரிக்க ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா நேற்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜாரானார்.
சுமார் 9 மணி நேர விசாரணைக்குப் பின் வெளியே வந்த அவர், பிரபலமாக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.
newstm.in