RBI Digital Rupee: இந்தியாவின் டிஜிட்டல் ரூபாய் பைலட் திட்டம் இன்று தொடங்குகிறது. மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகள், காகித நாணயத்தின் அதே மதிப்புகளில் டிஜிட்டல் பணமான இந்திய டிஜிட்டல் ரூபாய் டோக்கன்களை வெளியிடும். இதனை பணம் செலுத்துதவும், பெற்றுக்கொள்ளவும் பயன்படுத்தலாம்.
“சிபிடிசி (Central Bank Digital Currency) என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். இது வழக்கமான இந்திய நாணயத்தைப் போன்றது. இதனை, இந்திய நாணயத்துடன் மாற்றிக் கொள்ளலாம். கையில் வழக்கமாக வைத்திருக்கும் நாணயத்திற்கும் இதற்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது, அதன் வடிவம் மட்டுமே வேறுபட்டது” என இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி இன்று (2022 டிசம்பர் 1) முதல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சியான இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியை (சிபிடிசி) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த டிஜிட்டல் ரூபாயை யார் பயன்படுத்தலாம்?
டிசம்பர் 1-ம் தேதியான இன்று தொடங்கிய பைலட் திட்டத்தின் முதல் கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் மற்றும் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களை உள்ளடக்கிய மூடிய பயனர் குழுவினர் (CUG) இந்த ரீடைல் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரீடைல் டிஜிட்டல் கரன்சியை, மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். இந்த நான்குக் நகரங்களின் வாடிக்கையாளர்களும் வணிகர்களும் டிஜிட்டல் ரூபாயை (e₹-R) அல்லது இ-ரூபாய் பயன்படுத்தத் தொடங்கலாம்.
பின்னர் இந்த சேவை, அகமதாபாத், காங்டாக், குவாஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் இந்த முன்னோடித் திட்டத்தில் இணையும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதைத்தவிர, வங்கிகள், பயனர்கள் மற்றும் தேவைப்படும் இடங்களைச் சேர்க்கும் வகையில் பைலட் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
சில்லறை டிஜிட்டல் ரூபாய் என்னவாக இருக்கும்?
உண்மையில், சில்லறை மின்-ரூபாய் என்பது பணத்தின் மின்னணு பதிப்பாக இருக்கும், இது முதன்மையாக சில்லறை பரிவர்த்தனைகளுக்காகவே இருக்கும். தனியார் துறை, நிதி அல்லாத நுகர்வோர் மற்றும் வணிகங்கள் என அனைவராலும் பயன்பாட்டிற்கு இது சாத்தியமானதாக இருக்கும்.
மத்திய வங்கியின் நேரடிப் பொறுப்பாக இருக்கும் இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்சி, பணம் செலுத்துவதற்கும் தீர்வு செய்வதற்கும் பாதுகாப்பான பணத்திற்கான அணுகலை வழங்க முடியும்.