மதுரை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வில் பல் மருத்துவப் படிப்பு சீட் பெற்ற மாணவி, 2-வது கலந்தாய்வில் எம்பிபிஎஸ் சீட் கேட்டு தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜிஷிகா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “நீட் தேர்வில் 232 மதிப்பெண் பெற்றேன். எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்புக்களுக்கான நிர்வாக ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்றேன். முதல் சுற்று கலந்தாய்வில் பல் மருத்துவம் படிக்க சீட் கிடைத்தது. எம்பிபிஎஸ் சீட் பெற 2-ம் சுற்று கலந்தாய்வில் மறுஒதுக்கீடு கோரி விண்ணப்பித்தேன்.
ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டில் முதல் சுற்றில் சீட் பெற்றவர்கள், 2வது கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் கேட்க முடியாது என தெரிவித்தனர். இதனால், 2-வது சுற்று மருத்துவ கலந்தாய்வு பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும், எனக்கு எம்பிபிஎஸ் சீட் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பவானிசுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.