தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் ஒன்றான மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவும் அருவியில் உள்ள குற்றாலப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் அபாய வளைவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து வழிவதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் குற்றால அருவியில் நீராட வந்த ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் ஐந்தருவி, சிற்றருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.