சென்னையில் மகன் பிறந்த நாளில் தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(37). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் வணிக வளாக பகுதியில் இரும்பு கடை ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் முனுசாமி அதே பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பெரியமேடு போலீசார், உயிரிழந்த முனுசாமியின் உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முனுசாமியை கொலை செய்த நபர் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம் போல் திருவள்ளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக ஆட்டோவில் வந்த 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் வணிகவளாகத்தில் முனுசாமியை கொலை செய்துவிட்டு தப்பியவர்கள் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரையும் பெரிய மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் அஷ்ரப் அலி மற்றும் அப்பாஸ் ஆகியோர் அல்லிகுளத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்தவர்கள் என்பதும், அவர்கள் திருட்டு செல்போன் வாங்கி வந்ததை முனுசாமி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் பகை ஏற்பட்டு முனுசாமியை 5 பேர் சேர்ந்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் நேற்று முன்தினம் மகனின் பிறந்த நாளில் முனுசாமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.