ஜாதி பேரணிகளை ஏன் நிரந்திரமாக தடை செய்யக்கூடாது… உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்வி!

ஜாதி அடிப்படையிலான பேரணிகள் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உத்தரபிரதேசத்தின் நான்கு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பி பதில் கோரியுள்ளது. மாநிலத்தில் ஏன் ஜாதி அடிப்படையிலான பேரணிகளை முழுமையாக தடை செய்யக்கூடாது என்றும், மீறினால் தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றம் புதிய நோட்டீஸ் அனுப்பியது.

அடுத்த விசாரணை டிசம்பர் 15ம் தேதி

உத்தரப் பிரதேசத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணிகளைத் தடை செய்யக் கோரி வழக்கறிஞர் மோதிலால் யாதவ் தாக்கல் செய்த பொதுநல மனு மீது தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் நீதிபதி ஜஸ்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜூலை 11, 2013 அன்று இந்த பொதுநல மனுவை விசாரித்த பெஞ்ச், மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணிகளை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

இருப்பினும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும், சம்பந்தப்பட்ட நான்கு தரப்பினரும், CEC அலுவலகமும் தங்களுக்கு அனுப்பப்பட்ட உயர் நீதிமன்ற நோட்டீஸ்களுக்கு பதிலளிக்கவில்லை. இது குறித்து கவலை தெரிவித்த பெஞ்ச், அரசியல் கட்சிகள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் டிசம்பர் 15ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2013 ஆம் ஆண்டு நீதிமன்ற பிரிவு பிறப்பித்த உத்தரவு

அதன் 2013 ஆம் ஆண்டு உத்தரவில், நீதிபதிகள் உமா நாத் சிங் மற்றும் நீதிபதி மகேந்திர தயாள் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஜாதி அடிப்படையிலான பேரணிகளை நடத்துவதற்கான தடையற்ற சுதந்திரம் முற்றிலும் வெறுக்கத்தக்கது என்றும், நவீன தலைமுறையினரின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. இத்தகைய நிகழ்வு சட்டத்த்திற்கு புறம்பான செயல் எனவும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அரசியல் செய்வதன் மூலம் சாதி அமைப்பில் அரசியலை புகுத்தும் முயற்சியில், அரசியல் கட்சிகள் சமூகக் கட்டமைப்பையும் ஒற்றுமையையும் கடுமையாக சீர்குலைத்துவிட்டதாகத் தெரிகிறது என்றும் பெஞ்ச் அப்போது கூறியது. இதனால் சமூகப் பிளவு ஏற்பட்டுள்ளது எனவும், பெரும்பான்மை குழுக்களின் வாக்குகளை கவரும் வகையில் அரசியல் கட்சிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் சிறுபான்மை இனத்தவர்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.