திருச்சி மாவட்டம், மணிகண்டம் அம்பேத்கர் நகரில் திரேந்தர் என்பவருக்குச் சொந்தமான மர அறுவை மில் இருக்கிறது. இந்த மில்லுக்குள் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் புகுந்த இளைஞர் ஒருவர், மில்லின் உரிமையாளரான திரேந்தரின் செல்போனைப் பறிக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, அந்த மில்லில் வேலை பார்த்த நபர்கள் அந்த இளைஞரைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். மேலும், மரத்தில் கட்டிப் போட்டவாறே இரவு முழுவதும் அந்த இளைஞரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர். சனிக்கிழமை காலை மில்லுக்குச் சென்று பார்த்தபோது, கட்டிப்போட்டிருந்த அந்த இளைஞர் உயிரிழந்து கிடந்திருக்கிறார்.
அதையடுத்து, பதறிப்போன மில்லின் உரிமையாளரான திரேந்தர், மணிகண்டம் காவல் நிலையத்திற்குச் சென்று, “எங்க மில்லுக்குள்ள திருட வந்தவனை கட்டிப்போட்டு வச்சிருக்கோம். வந்து புடிச்சிட்டுப் போங்க சார்!” என புகார் கொடுத்திருக்கிறார். அதையடுத்து மணிகண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்க்க கட்டிப்போட்டிருந்த இளைஞர் இறந்து கிடந்தது தெரியவந்திருக்கிறது.
அதையடுத்து இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்த நபர் துவாக்குடி வாண்டையார் நகரைச் சேர்ந்த இன்ஜினியரான சக்கரவர்த்தி (33) என்பது தெரியவந்திருக்கிறது.
அதையடுத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், முதற்கட்டமாக மில்லின் உரிமையாளரான திரேந்தர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை செய்திருக்கின்றனர். அப்போது, “சாயங்காலம் 6 மணிக்கு மில்லுக்குள்ள நுழைஞ்சவன் போனை புடிங்கிக்கிட்டு ஓடப் பார்த்தான். நாங்க துரத்தவும் ஓடிட்டான். ராத்திரி 10 மணிக்கு மறுபடியும் சுவர் ஏறிக் குதிச்சி அவன் எங்க மில்லுக்குள்ள திருட வந்தான். ராத்திரி நேரம் ஆனதால கட்டிப்போட்டு காலையில போலீஸ்கிட்ட ஒப்படைக்கலாம்னு இருந்தோம். அதுக்குள்ள எப்படியோ இறந்துட்டான்” என எதுவும் நடக்காதது போல போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
அதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் ஆராய, சாயங்காலம் சுமார் 7 மணிக்கு மில்லுக்குள் நுழைந்த அந்த இளைஞரை, மில்லின் உரிமையாளரான திரேந்தர் மற்றும் ஊழியர்கள் தாக்கியதும், அப்போதே கட்டிப்போட்டு அடித்ததும் தெரிந்திருக்கிறது. மேலும், இவர்கள் சொன்னது போல திருட வந்த இளைஞர் திரும்ப 10 மணிக்கு வந்ததாகச் சொன்ன சம்பவமே அரங்கேறவில்லை என்பது தெரிந்திருக்கிறது. அதையடுத்து போலீஸார் லேசாக அதட்டவே, திரேந்தர் நடந்த சம்பவத்தை ஒப்புக் கொண்டார். அதையடுத்து மில்லின் உரிமையாளரான திரேந்தர் மற்றும் ஊழியர்கள் மூவர் என மொத்தம் 4 பேரை மணிகண்டம் போலீஸார் கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நடந்த சம்பவம் குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “உயிரிழந்த சக்கரவர்த்தி இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையிலுள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். சக்கரவர்த்தி போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால், குடும்பத்தார் அவருக்கு சிகிச்சை கொடுத்து வந்திருக்கின்றனர். அதில் உடல்நலம் தேறி குணமானவர், சென்னையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் துவாக்குடிக்கு வந்தவர், மறுபடியும் தொடர்ச்சியாக குடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதனால் மீண்டும் சுயநினைவை இழக்கும் அளவிற்கு சாலைகளில் சுற்றித் திரிந்திருக்கிறார். அப்படி போதையில் திரேந்தரின் மில்லுக்குள் சக்கரவர்த்தி நுழைய, அவர்களுக்குள் ஏதோ பிரச்னையாகியிருக்கிறது. அதில் கோபமடைந்த திரேந்தர் தரப்பு சக்கரவர்த்தியை கட்டிவைத்து கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். குறிப்பாக, ‘எங்க மில்லுக்குள்ள திருடன் புகுந்துட்டான்’ என திரேந்தர் ஆதாரமாகக் கொடுத்த சிசிடிவி காட்சிகளே, அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதையும், திரேந்தனுக்கே சிக்கலாகவும் அமைந்துவிட்டது” என்றனர்.