ஜெயலலிதா நினைவிடத்தில்
ஆதரவாளர்கள், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தனித்தனியே அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொதுச் செயலலாளருமான ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் அதிமுகவினர் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்திய நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், கே. பி. முனுசாமி, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் என பெரும் படையுடன் சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கருப்பு சட்டை அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற சூளுரைப்போம் என உறுதி மொழி ஏற்றனர்.
அந்த உறுதி மொழியில், “எதிரிகள் ஒருபுறம், துரோகிகள் மறுபுறம் என்றிருக்கும் சூழல் பொய் வழக்குகளை முறித்து சதிவலைகளை அறுப்போம். குடும்ப ஆட்சியின் கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம். அதிமுக என்பது ஆயிரங்காலத்து பயிர். தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றி தழைத்து நிற்கும் ஆலமரம். இதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. அதிமுகவை கட்டிக்காப்போம். இந்திய அரசியல் சரித்திர வானில் நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சியாக கழகத்தை மாற்றியவர் ஜெயலலிதா. நாடாளுமன்றத் தேர்தலுக்காக வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து வரலாற்று வெற்றிக்கு சூளுரைப்போம். நாற்பதும் நமதே நாளையும் நமதே என்று சபதம் ஏற்போம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று வெற்றி முழக்கமிட்டு திக்கெட்டும் வெற்றியை படைத்திடுவோம். அதற்காக அயராது உழைப்போம். கழகத்தின் வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம் என்று உறுதியேற்போம். தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். புரட்சித் தலைவியின், புரட்சித் தலைவரின் பெரும்புகழையும் எந்நாளும் போற்றிடுவோம். களங்கள் அனைத்திலும் வென்றிடுவோம். கழகத்தை இமயமாய் உயர்த்திடுவோம் என்று உளமார உறுதியேற்போம். வாழ்க அண்ணா புகழ். வளர்க்க எம்ஜிஆரின் பெரும்புகழ். ஓங்குக அம்மாவின் நெடும்புகழ். வெல்க வெல்க வெல்கவே. அஇஅதிமுக என்றும் வெல்க வெல்க வெல்கவே” என்று கூறினர்.
அவர்களைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து நடை பயணமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து சசிகலாவும், டிடிவி தினகரனும் வெவ்வேறு நேரங்களில் அஞ்சலி செலுத்துகின்றனர்.