மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அம்மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு குஜராத், சவுராஷ்ட்ரா தொகுதிகளை உள்ளடக்கிய 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 1ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அதில், 63.31 சதவீத வாக்குகளே பதிவாகின. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அகமதாபாத், காந்திநகர் உள்ளிட்ட 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் குஜராத் மாநில மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட 61 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியதும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மகனும் பிசிசிஐ செயலருமான ஜெய்ஷாவுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அகமதாபாத்தின் நரன்புரா பகுதியில் உள்ள ஏ.எம்.சி மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் அமித்ஷா தனது வாக்கினை செலுத்தினார்.
அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்துக்கு நேர்ல் சென்ற பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலை அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும், ஜனநாயக கடமையை ஆற்றி வரும் வாக்களர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல், குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தனது வாக்கினை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், குஜராத் தேர்தலில் பாஜக தனது பழைய சாதனைகளை முறியடிக்கும் என்று ஆருடம் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. இந்த முறையும் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பாஜக தவிர ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் குஜராத்தில் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. இந்த முறை ஆம் ஆத்மி கட்சியானது பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் பதிவான வாக்குகள் வருகிற 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.