மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கப்பட்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு நகரும் அபாயம் உள்ளதாக சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் தேசிய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆடைத்துறையில் உள்ள மூன்று தொழிற்சாலைகள் இம்மாதம் தொழிற்சாலைகளை மூடிவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அந்த மூன்று தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 5000 தொழிலாளர்கள் வேலையை இழப்பர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலர் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்
இந்தியா மற்றும் மாலைத்தீவுகளுக்கு செல்ல விரும்பும் ஊழியர்களை நிர்வாகத்திற்கு அறிவிக்குமாறு நிறுவனம் ஏற்கனவே கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மடங்குக்கு மேல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டமையினால் முதலீட்டாளர்களின் இலாபம் குறைந்துள்ளதாகவும், மின் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மேலும் அதிகரித்துள்ளமையினால் பயனற்றதாக கருதி இந்த நாட்டில் உள்ள தொழிற்சாலைகளை மூடிவிட்டு வேறு நாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாட்டில் கணிசமான தொழிற்சாலைகள் ஏற்கனவே மூடப்பட்டு பணிநீக்கங்கள் மற்றும் கூடுதல் நேர வேலைநிறுத்தங்கள் உட்பட வெட்டுக்கள் நடந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
கட்டண உயர்வுக்கு பிறகும், மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் தொடர்ந்து சேவைகளை பராமரிக்க முடியாத நிலையும் உள்ளது.
இலங்கையில் உற்பத்திச் செலவு அதிகரிப்பதன் காரணமாக உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதாகவும், உலகின் ஏனைய நாடுகளின் உற்பத்திகளுடன் அந்தப் பொருட்கள் போட்டியிடும் போது, இலங்கைப் பொருட்களின் கொள்வனவு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் திணைக்கள சட்டத்தின் படி ஒரு நிறுவனத்தை மூடும் போது ஒரு ஊழியருக்கு 12 முதல் 25 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், ஊழியர் அறக்கட்டளை நிதியில் உள்ள பணத்தில் இருந்து இந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.