தேவகோட்டை : தேவகோட்டை அருகே கண்மாய் தண்ணீரை பகிர்வது தொடர்பாக இரண்டு கிராமத்தினர் போராட்டம் நடத்தி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவகோட்டை தாலுகா சிறுவாச்சி அருகே 100 ஆண்டுகள் பழமையான முத்துநாடு கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 30க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. காரைக்குடியில் இருந்து வரும் தேனாற்று தண்ணீர் மூலம் முத்துநாடு கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து 45 கண்மாய்களுக்கு செல்கிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்துநாடு கண்மாய் கரை உடைக்கப்பட்டு, ஆற்று தண்ணீர் திருப்பி விடப்பட்டதாக தெரிகிறது. இதனால் பாதிப்பு அடைந்த மாடக்கோட்டை, ஆணையடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு மனு அளித்தனர். பின்னர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
இதன்பிறகு திருச்சி-ராமேஸ்வரம் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டாட்சியர் பால்துரை தலைமையிலான அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தததை தொடர்ந்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனிடையே, உடைத்து திறந்த கண்மாயை அடைத்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என, களபங்குடியை சேர்ந்த மக்கள் கோட்டாட்சியர் பால்துரையிடம் மனு அளித்தனர். கண்மாயை அடைக்க வேண்டும், திறக்க வேண்டும் என இருதரப்பினர் மாறிமாறி போராட்டம் நடத்தி மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை
இது குறித்து சமூக ஆர்வலர் ராமசாமி கூறுகையில், ‘‘கண்மாய் பிரச்சனை தொடர்பாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். முந்தைய காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதனையே தொடர்ந்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்’’ என்றார்.