புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின்(பிஎச்யூ) மைய நூலகத்தில் அரிய தமிழ் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
மத்திய அரசின் தேசியப் பல்கலைக்கழகமான பிஎச்யூ-வில் 1945-ம் ஆண்டு பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் தமிழ் பிரிவு துவக்கப்பட்டது.
அங்குள்ள சைவ சித்தாந்த தத்துவத்தையும் வடபுலத்துத் தத்துவ மரபுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பொருட்டு தமிழ்ப் பிரிவு தொடங்கப்பட்டது. 1977-1978-ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மூன்று லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிஎச்யூ வளாகத்தில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமத்தின் ஒரு பகுதியாக சாயாஜி ராவ் கெய்க்வாட் மைய நூலகத்தின் சார்பில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை பாரதிய பாஷா சமிதியின் தலைவரும் காசி தமிழ்ச் சங்கமத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான பத்மஸ்ரீ சாமுகிருஷ்ண சாஸ்திரி, நேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன், பிஎச்யூ நூலகர் முனைவர் தேவேந்திர குமார் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். துணை நூலகர்களான முனைவர் சுசித்தா சிங், முனைவர் ஆர்.பரமேஸ்வரன், இந்திய மொழிகள்துறை தமிழ் பிரிவின் உதவிப்பேராசிரியர்களான முனைவர். த.ஜெகதீசன், முனைவர் சு.விக்னேஷ் ஆனந்த், தமிழ் ஆய்வு மாணவர்கள், ஆர்வலர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய கிருஷ்ணசாஸ்திரி பேசும்போது, ‘‘இந்த பழமையான அரிய ஆவணங்கள் பல்கலைக்கழக நூலகத்தில் முறையாக பாதுகாக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அதேசமயம் இந்த ஆவணங்கள் சரியாக வகைப்படுத்தப்பட்டு ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் வைக்கப்பட வேண்டும். இதுவே இன்றைய தேவையாக உள்ளது’’ என்றார்.
கிரந்த எழுத்து: மத்திய நூலகத்தில் 1890-கள் தொடங்கி வெளிவந்த பல்வேறு தமிழ் நூல்கள், 17, 18-ம் நூற்றாண்டுகளில் தமிழ் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட 12 ஓலைச்சுவடிகள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
இதுவரையிலும் பிஎச்யுவின் தமிழ்ப் பிரிவில் ஐந்து பேர் ஒப்பிலக்கிய ஆய்வுத் தலைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இந்த தமிழ்ப் பிரிவில் இளங்கலை, மொழிப்பாடம், முனைவர் பட்டம், தமிழ் பட்டயப்படிப்புகள் உள்ளன. இங்கு 5 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். வட இந்திய, வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பணியையும் இந்தத் தமிழ்ப் பிரிவு செய்து வருகிறது.
பாரதியாரின் 100-வது நினைவு நூற்றாண்டையொட்டி சென்ற ஆண்டு பிரதமர் மோடி, பாரதியார் ஆய்வு இருக்கை ஒன்று பிஎச்யூவில் அமைக்கப்பெறும் என்று அறிவித்தார். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.