குழந்தை பெற்ற 17 வயது சிறுமி; சிகிச்சைக்குச் சென்ற போது விபத்தில் பலி – கணவர் மீது பாய்ந்த போக்சோ!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (25). கூலித் தொழிலாளியான இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
இந்தச் சிறுமி கர்ப்பமான நிலையில் இவருக்கு கடந்த 24-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
சிறுவயதிலேயே கர்ப்பம் ஆனதாலும், அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்ததாலும் இவரின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இந்த சிறுமியின் உடல்நிலை மோசமானது. மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து, அந்த சிறுமி தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை  மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். அந்த ஆம்புலன்ஸ் ஈரோடு- பெருந்துறை ரோட்டில் மேட்டுக்கடை ரவுண்டானா பகுதியில் வரும்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியதில் ஆம்புலன்ஸில் இருந்த சிறுமி படுகாயமடைந்தார்.

108 ஆம்புலன்ஸ்

எனவே வேறு ஒரு ஆம்புலன்ஸ் மூலமாக அந்த சிறுமியை மீட்டு கடந்த 27-ம் தேதி அதிகாலை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த 2-ம்  தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மொடக்குறிச்சி போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில்   கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவின் கீழ் மொடக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல ஆம்புலன்ஸை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்று, விபத்து ஏற்படுத்திய தனியார் மருத்துவமனை டிரைவர் சரத் என்பவர் மீதும் தாலுகா போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.