தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை தடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மறியல் கிராமத்தில், சாலையோரம் ஆதிதமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையின் அலுவலகத்தின் முகப்பில் 7 அடி உயர அம்பேத்கர் சிலை உள்ளது. அம்பேத்கரின் 66-வது நினைவு நாளையொட்டி இன்று (டிச. 6) காலை விடுதலை சிறுத்தைகள், தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், பாஜகவின் மாநில துணைத் தலைவர் கருப்பு எம்.முருகானந்தம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி தலைமையிலான தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பாஜகவினர் இந்த சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அம்பேத்கர் சிலையை சுற்றிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நின்று கொண்டு மாலை போட விடாமல் தடுத்து, பாஜகவினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் செல்லமாட்டோம் எனக் கூறி பாஜகவினரும் அம்பேத்கர் சிலை அருகே நாஞ்சிக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்ததும் தஞ்சாவூர் நகர டிஎஸ்பி ராஜா மற்றும் போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.