பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், அதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தெற்கு குஜராத், சவுராஷ்ட்ரா தொகுதிகளை உள்ளடக்கிய 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 1ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அதில், 63.31 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. அதில், சுமார் 59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்ட பலர் வாக்களித்தனர். அகமதாபாத் நகர் ரானிப் பகுதியில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்துக்கு நேர்ல் சென்ற பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலை அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும், ஜனநாயக கடமையை ஆற்றி வரும் வாக்களர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். முன்னதாக, வாக்களித்து விட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த பிரதமர் மோடி, அப்படியே சிறிது தூரம் நடந்து சென்றார்.

இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிரதமர் மோடி மீது குஜராத் மாநில தேர்தல் ஆணையத்தில்
காங்கிரஸ்
கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் சட்டப் பிரிவு தலைவர் யோகேஷ் ரவானி அளித்துள்ள அந்த புகாரில், ரானிப்பில் உள்ள வாக்குச் சாவடியில் இருந்து 500-600 மீ தொலைவில், பிரதமர் மோடி பாஜக கொடியை ஏந்தி, பாஜக கொடி வண்ணத்தில் ஸ்கார்ஃப் அணிந்து, அங்கு கூடியிருந்தவர்களுடன் நடந்து சென்றதாக கூறப்பட்டுள்ளது.

“பிரதமர் மோடி வாக்குச் சாவடியின் வாயிலில் இருந்தே வெளியேறியிருக்கலாம். ஆனால் அவர் சற்று முன்னேறி நடந்து சென்றார். அப்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் அவர் உரையாடினார்.” என யோகேஷ் ரவானி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த செயல் பாஜகவுக்காக பிரசாரம் செய்வது போன்றும், தேர்தல் நாளில் வாக்களர்களை குறிப்பிட்ட கட்சியின்பால் ஆதிக்கம் செலுத்தி ஈர்ப்பது போன்றும் இருப்பதாக யோகேஷ் ரவானி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதாக தேர்தல் ஆணையம் தங்களுக்கு உறுதியளித்துள்ளதாக புகார் அளித்த பின்னர், யோகேஷ் ரவானி கூறினார். மோடி வாக்களிக்க வரும் காட்சிகளை உள்ளூர் மற்றும் தேசிய தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பியதாகவும், இது வாக்களர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தவிர மூன்று புகார்களையும் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. சோட்டா உடேபூரில் 400 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட கலோல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான பிரபாத் சஹானுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

மேலும், தேர்தல் நாளில் கட்லோடியா தொகுதியில் முதலமைச்சர் பூபேந்திர படேலின் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டதாகவும், அகமதாபாத்தில் உள்ள பபுநகர் தொகுதி சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அங்குள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்குள் நுழைந்து அமளியில் ஈடுபட்டதாகவும் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.