மக்களே கவனம்.. இன்று முதல் ஆட்டத்தை தொடங்குகிறது 'மாண்டஸ்'..!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயல் காரணமாக, 8 மற்றும் 9-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று (டிச.5-ம் தேதி) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (6-ம் தேதி) மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

அதன்பின்னர், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து வருகிற 8-ம் தேதி புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயல், 8-ம் தேதி காலை வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி அருகே வந்தடையக்கூடும்.

இதன் காரணமாக, இன்று (6-ம் தேதி) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், நாளை (7ம் தேதி) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வருகிற 8-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக் கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 9-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.